செப்டம்பர்,11-
இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்து, வாக்காளர்களை குளிர்வித்து வருகிறது.அங்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசும் இப்போதே பல வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய் சிங் செய்த காரியம் அவரது பெயரையும், காங்கிரஸ் பெயரையும் ரிப்பேர் ஆக்கியுள்ளது. அண்மையில் அவர், சமூக வலைத்தளத்தில், பிரபல செய்தி சேனல் வெளியிட்ட , தேர்தல் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டார்.’மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜக தூக்கி எறியப்படும்- காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’ என அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திக்விஜய் சிங்கின் இந்த பதிவை பார்த்த செய்தி சேனல் ஆசிரியர் குழு ஆடிப்போனது.இந்த கருத்து கணிப்பு எப்போதோ எடுக்கப்பட்டு, எப்போதோ ஒளிபரப்பபட்டதாகும்.
தங்கள் சேனலின் பழைய கருத்து கணிப்பை, திக்விஜய் சிங் வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, சிங் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
பாஜகவுக்கு ஒரே கொண்டாட்டம்.’பொய்யை பரப்புவுதே காங்கிரஸ் வழக்கமாகி விட்டது. போலி கருத்து கணிப்பை வெளியிட்ட காங்கிரஸ் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்’ என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
போலி கருத்து கணிப்பை இப்போது தனது வலைத்தள பக்கத்தில் இருந்து திக்விஜய் சிங் அகற்றிவிட்டார். ஆனால் அவர் மீது மக்கள் மனதில் படிந்து விட்ட கறையை அகற்றமுடியாதே!
000