ஜுலை,29-
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர் நரேந்திர மோடி ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.நெய்லா குவாட்ரி நாடு கடந்த பலுசிஸ்தான் அரசாங்கத்தின் பிரதமராக அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
“பிரதமர் நரேந்திர மோடி , ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஹரித்துவாரில் கங்கையின் விஐபி துறையில் வெள்ளிக்கிழமை பூஜை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலுசிஸ்தானின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்ய வந்து உள்ளதாக கூறினார்.
“ஒரு காலத்தில் சுதந்திர நாடாக இருந்த பலுசிஸ்தான், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது, அதன் கனிம வளங்களை கொள்ளையடித்து, அதன் மக்களை அனைத்து வகையான கொடுமைகளுக்கும் ஆளாக்கி வருகிறது. பலூச் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு தீ வைக்கப்படுகின்றன,” என்றும் நெய்லா குற்றஞ்சாட்டினார்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குட்டாவில் பிரபல வழக்கறிஞராக விளங்கிய சையது அகமது குவாட்ரிக்கு மகளாக கடந்த 1964 ஆம் ஆண்டு பிறநத்வர் நெய்லா.
பாகி்ஸ்தானின் நான்கு பெரிய மாகாணங்களில் ஒன்றுதான் பலுசி்ஸ்தான். தமிழ்நாடடைப் போன்று இரண்டரை மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது. இங்கு சுமார் ஒன்றே கால் கோடி பேர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றன.
000