அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரானார். அப்போது அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கையின் போது இம்ரான் கானின் வழக்கறிஞரும் கடுமையாக தாக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட இம்ரான் கான், தான் கைது செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.
தனது தேர்தல் பரப்புரையை தடுக்க தன்னை கைது செய்ய அரசு மற்றும் ராணுவம் திட்டமிட்டு இருப்பதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய இம்ரான் கான், எதையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.
இதனிடையே அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, பதற்றத்தை தணிக்க இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.