மணிப்பூரில் சுமார் நாற்பது நாட்களாக தொடரும் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. ராணுவம் நேரடியாக களம் இறங்கியும் கலவரத்தைக் கட்டுப்படுத்து முடியவில்லை. இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வாசி உயர்ந்து இருக்கிறது.பல ஆயிரம் பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இத்தனைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிதான் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி செய்கிறது.
கட்டுப்படுத்த முடியாத கலவரம் பற்றி நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மனித உரிமைக் குழுவைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என 550 பேர் ஒன்றிணைந்து ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். .
இந்த அறிக்கையில் அவர்கள், மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய நிலைமைக்கு பிரதமர் தனது மௌனத்தை உடைத்து “பொறுப்புக் கூற வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
“பாஜக மற்றும் அதன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரித்தாளும் அரசியலால் மணிப்பூர் இன்று மிகப் பெரிய அளவில் எரிகிறது. மேலும் பல உயிர்களை இழக்கும் முன், நடந்து கொண்டிருக்கும் இந்த உள்நாட்டுப் போரை நிறுத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் மீது உள்ளது” என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“நாடு முழுவதும் பாஜக தனது சொந்த அரசியல் லாபத்திற்காக சமூகங்களுக்கு இடையே பழைய பதட்டங்களை மீண்டும் அதிகரிக்கச் செய்கிறது. இரு சமூகத்தினரும் தோழமையுடன் பேச்சு நடத்தி அவர்கள் இடையிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அந்த அறிஞர்களின் குற்றச்சாட்டாகும்.
இந்த அறிக்கைக்கு பாரதீய ஜனதா தரப்பில் எந்த பதிலும் இது வரை இல்லை.
இதனிடையே மணிப்பூரில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் இம்பால் இல்லத்தை வியாழக்கிழமையும் ஒரு கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது. இதன் மூலம் வன்முறையின் தீவிரம் எந்த அளவுக்கு உக்கிரமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கொங்பா நந்தீபாம் லைகாயில் அமைந்துள்ள மத்திய அமைச்சரின் வீடு, ஒரு கும்பலால் தாக்கப்பட்டது. வியாழக்கிழமை. அவருடைய வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அப்போது கொச்சியில் இருந்த மத்திய அமைச்சர், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வீட்டைக் கட்டியதாகக் கூறினார். மேலும், நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்த அமைச்சர் தமது வீடு தாக்கப்படுவது இது இரண்டாவது முறை என்று தெரிவித்து உள்ளார்.
கிரிமினல் வழக்கு.
மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மந்திரி புக்ரியில் உள்ள அசாம் ரைபிள்ஸ் பிரிவை உருவாக்கியதுதான் என்று இம்பாலைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கட்டுரை எழுதியதற்காக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை, மியான்மரை தளமாகக் கொண்ட “குகி பயங்கரவாத அமைப்புகளை” அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே மே 3 ஆம் தேதி அன்று வன்முறை வெடித்ததில் இருந்து, குகி சமூக கிளர்ச்சிக் குழுக்களுக்கு அசாம் ரைபிள்ஸ் உதவி செய்வதாக பல மெய்டே சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் கூறி வருகின்றன.
எது எப்படியோ மணிப்பூரில் அமைதி இல்லை. அங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்றக் கோரிக்கை நாடு முழுவதும் பலமாக வலியுறுத்தப்படுகிறது. அமைதி எப்போது திரும்பும் என்பதுதான் இப்போது உள்ள கேள்வி.
000