பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுடுவதாக கூறிய மு.க.ஸ்டாலின், கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
95 வயது வரை வாழ்ந்த கலைஞர் மேலும் 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று விழா நாயகனாக இருந்திருப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞரின் ஆசியை தொடர்ந்து பெற்றுக் கொண்டே ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் கருணாநிதி. நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் கருணாநிதி என்றும், இன்றைக்கு திராவிட மாடல் என்ற தத்துவத்தோடு ஒரு ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்றால் அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி எனவும் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சமூக நீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – இன உரிமை – மொழிப்பற்று – மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடு தான் திராவிடக் கோட்பாடு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லார்க்கும் எல்லாம் என்பதே அதனுடைய உள்ளடக்கம் என்றும், . எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.