பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆள விடுவது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவர், திருவாரூர் அடுத்த காட்டூரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள கலைஞர் கோட்டைத்தை திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
கோட்டத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக இருந்த பீகார் முதலைமச்சர் நிதீஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் மு.க. ஸ்டாலினே கோட்டத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
நிதீஷ்குமார் வரவில்லை என்றாலும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், திருவாரூர் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர், தமது கையைால் முத்துவேல் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போது தான் கோட்டமும் கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞர் மறைவுக்குப் பிறகு அவருக்கு கோட்டம் கட்டப்பட்டு உள்ளது. இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளந்தான் இந்த கோட்டம்.
தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேருவது போல கலைஞருக்கு அவர் பிறந்த திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. கலைஞர் மறைந்த பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர். அறிஞர் அண்ணாவை கலைஞர் சந்தித்து திருவாரூரில் தான்.
பாரதீய ஜனதாவை மீண்டும் ஆள விடுவது நாட்டுக்கு ஆபத்து. அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை பீகார் மாநில மண் தொடங்கி உள்ளது.அவர்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். பாட்னாவில் இந்த மாதம் 23 ஆம் தேதி நடை பெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலைஞரின் தளபதியாக பங்கேற்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோ மீட்டரில் காட்டூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு கலைஞருக்கு ஆறு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலம் தயாளு அம்மாள் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு கலைஞர் கோட்டம் ரூ 12 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.
கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்து வேல் பெயரில் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு ஆகியவை இங்கு அமைக்கப்பட்டு உள்ளன..
திறப்பு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம்,கவியரங்கம், பாட்டரங்கம் ஆகிய நிகழச்சிகளும் நடை பெற்றன. காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் இசையுடன் விழா தொடங்கியது. கவிஞர் வைரமுத்து கவியரங்கத்திற்கு தலைமை வகித்தார். கவிஞர்கள் பா.விஜய், கபிலன், ஆண்டாள் பிரியதர்ஷ்ணி, தஞசை இனியன் ஆகியோர் பங்கேற்று கவிதை பாடினார்கள்.
அதன் பிறகு பட்டிமன்றம். மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் எழுத்தே, பேச்சே என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது , பராதி பாஸ்கர் ஆகியோரும் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முக வடிவேல், கவிதா ஜாவகர், ராஜா ஆகியோரும் பேசினார்கள்.
மாலை மணி அளவில் மாலதி லட்சுமணன் குழுவினரின் பாட்டரங்கம் நடை பெற்றது. அது முடிந்த பின் நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டா மோகன் காமேஷ்வரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்று இருந்தனர். விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல ஜ.ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் டி.ஜ.ஜி. ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.
000