ஜுலை,21- மண்டையை பிளக்கும் வெயில் கொளுத்தும் ஏப்ரல் மாத கடைசியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே ‘நீயா ?நானா?’ ஆட்டத்தை ஆரம்பித்து விட்டன.
செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு, ஸ்டாலின், மெஹ்பூபா முப்தி, சரத்பவார், மம்தா என நான்கு திசைகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.’இந்தியா’என இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டப்ட்டது.
26 கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதில் 6 பேர் மாநில முதலமைச்சர்கள்’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இந்த கூட்டம் முடிந்த கொஞ்ச நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் 38 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
‘உனக்கு 26.. எனக்கு 38 ‘ என பாஜக தலைவர்கள் மார் தட்டிக்கொண்டனர். கடந்த 25 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிறிதும், பெரிதுமாக பல கட்சிகள் ஒதுங்கிச் சென்றுவிட்ட நிலையில், ’மெகா கூட்டணியை பாஜக கட்டமைத்து விட்டதே? என்று அரசியல் நோக்கர்கள் அதிசயித்தனர்.
உள்ளே மூக்கை நுழைத்து பார்த்தால் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இந்த 38- ல் பல கட்சிகள் ‘லட்டர் பேடு’கட்சிகளாகும்.‘’மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவோம்’’ என சூளுரைத்த கட்சிகளில் 9 கட்சிகள் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவே இல்லை.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளில் 27 கட்சிகளுக்கு மக்களவையில் ஒரு எம்.பி.கூட கிடையாது. தமிழ்நாட்டை பொறுத்த வரை அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த பட்டியலில் அடக்கம்.
ஒரு எம்.பி.கூட இல்லாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா , தெலங்கானா, மகாராஷ்டிரா,கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய தெற்கு பிராந்திய பாஜக கூட்டணியின் பிரதிநிதியாக நியமனம் செய்துள்ளனர்.
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 39 இடங்களை அள்ளியது.உபயம்: ஐக்கிய ஜனதா தளம். இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் , பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது. அந்த கட்சி ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பீகாரில் தனித்து நின்றால் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது என்ற நிலையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக்கின் கட்சி உள்ளிட்ட 5 சின்ன கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளது பாஜக. அந்த 5 கட்சிகளுக்கும் ஒட்டு மொத்தமாக 10 சதவீதத்துக்கும் கீழே தான் ஓட்டுகள் உள்ளன.
அது மட்டுமல்ல..
யாருக்கு எந்த தொகுதி? என்ற சண்டையும் , பாஜக கூட்டணியில் ஆரம்பித்து விட்டது.
ஏன்?
பிஜாபூர் தொகுதியில் இப்போது எம்.பி.யாக இருப்பவர் பசுபதி பரஸ். இவர், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர். பஸ்வான் இறந்த பின்,அவரது கட்சியான லோக் ஜனசக்தி,பரஸ் வசம் தான் உள்ளது.இவர் மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைந்ததும், அவர் மகன் சிராக், தனிக்கட்சி ஆரம்பித்தார். கடந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, தனித்துப்போட்டியிட்டார், சிராக்.அவருக்கு தலித் மக்களிடையே சிராக்குக்கு ஓரளவு ஆதரவு உள்ளதால் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக மேலிடத்தால் அழைக்கப்பட்டு இருந்தார்.
அதனை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்ற சிராக் ‘ வரும் தேர்தலில் பிஜாபூர் தொகுதியில் நான் போட்டியிடுவேன்’ என தன்னிச்சையாக அறிவித்தார். இந்தசெய்தியை கேள்விப்பட்ட பசுபதி பரஸ் கொதித்துப்போனார்.
‘பிஜாபுர் எனது தொகுதி.ஒரு போதும் அதனை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என கனல் கக்கியுள்ளார். பீகார் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும், கூட்டணி கட்சிகளால், பாஜகவுக்கு இப்போதே தலைவலி ஆரம்பித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன. அதற்குள் நடப்பதை யார் அறிவார்?
000