பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நம்பிக்கை தருவதாகவும், பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பாட்னாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்ததாகவும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று கூட்டத்தில் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று தான் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார்.
ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் பேசியதாகவும், நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற தனது கருத்தை முன்வைத்ததாகவும் கூறினார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்கக்கூடாது, குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.