ஜூன், 27- பாரதீய ஜனதாவுக்கு எதிராக பாட்னாவில் கடந்த வாரம் கூடிய கட்சிகள் செய்துள்ள ஊழல் தொகை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகருக்குச் சென்றிருந்த அவர் அங்கு மெட்ரோ ரயில்கள் தொடக்கவிழாவில் பங்கேற்றார். பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது..
ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களுடைய சுயநலன்களை திருப்திப்படுத்தும் அரசியல் செய்து, சமூகத்தில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன.
இவர்களால் உத்தரவாதம் என்ற ஒரு புதிய வார்த்தை இன்று பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எதிர்க்கட்சிகளுக்கு உத்தரவாதம் என்றால், ஊழல் என்று அர்த்தம்.
சமீபத்தில் ஒரு புகைப்படம் ( பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எடுத்துக்கொண்டது) பார்த்தேன். அந்த படத்தில் உள்ள கட்சிகளின் ஊழலை நீங்கள் இணைத்தீர்கள் என்றால், அது ரூ.20 லட்சம் கோடியை விட கூடுதலாக இருக்கும்.
அக்கட்சிகளின் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் குற்றவாளிகள்.
இந்த கட்சிகள் வழங்க கூடிய ஒரே உத்தரவாதம் என்பது ஊழலுக்கான உத்தரவாதமே ஆகும். இதுபோன்ற ஊழலை ஏற்று கொள்ள வேண்டுமா? என்று தற்போது நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நானும் இன்று ஓர் உத்தரவாதம் அளிக்கிறேன். ஊழலுக்கான உத்தரவாதம் அவர்களிடம் இருக்குமென்றால், அதன்பின்னர், அனைத்து ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மோடியின் உத்தரவாதமும் இருக்கும். ஏழைகளிடம் கொள்ளையடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஊழல் செய்தவர்கள் யாரையும் நான் விடமாட்டேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுகிறார்கள்.
சிவில் சட்டம்.
முத்தலாக் முறை இஸ்லாத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்றால், அது ஏன் முஸ்லீம்களின் நடைமுறையில் இல்லை.
எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, பங்களாதேஷ்,பாகிஸ்தான் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இங்கு முத்தலாக்கை தடை செய்தால் கூச்சல் போடுகிறார்கள். முஸ்லிம்கள் 90 சதவிகிதம் வசிக்கும் எகிப்து நாட்டில் 90 ஆண்டுகளுக்கு முன்பே முத்தலாக் முறையை ரத்து செய்துவிட்டனர்.
முத்தலாக்கை ஆதரித்து பேசுகிறவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு கடுமையான அநீதி இழைக்கிறார்கள்.
முத்தலாக் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் திருமணம் செய்து கொடுக்கும் ஒரு பெண்ணை, முத்தலாக் சொல்லி திருப்பி அனுப்பும் போது, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கவலை அடைகின்றனர்.
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம். ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு தனித்தனி விதிகள் இருக்கக் கூடாது. எனவே தான் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.