ஜுன். 30 – புதிய தயாரிப்பாளர்கள் தொடங்கும் சினிமாக்கள் பூஜையுடன் நின்று போவதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உ ச்ச நட்சத்திரங்கள் படங்களும், ஆரம்ப நிலையிலேயே நின்று போயுள்ளன. அது குறித்த ஒரு தொகுப்பு:
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சுறுசுறுப்பாக ஆரம்பித்த படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.பெரியபட்ஜெட்டில் ஆப்பிரிக்காவில் சென்று பல காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார், எம்.ஜி.ஆர்.
சத்யா ஸ்டூடியோவில் ஷுட்டிங் தொடங்கியது.எம்.ஜி.ஆரும், லதாவும் நீக்ரோ வேடத்தில் நடித்த காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்து, தீவிரமாக அரசியலில் இறங்கியதால் அந்த படத்தை தொடர முடியவில்லை. இரண்டு நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடந்தது.
ஜக்குபாய்
பாபா படம் தோல்வி அடைந்ததால் கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் ரஜினிகாந்த் ஆரம்பித்த படம் ஜக்குபாய். அரேபிய ஷேக் மாதிரி ரஜினி உடை அணிந்து, அவர் பக்கத்தில் எந்திர துப்பாக்கி இருப்பது போல் விளம்பரம் வெளிவந்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பில் இருந்தார்கள்.சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் எந்த காரணமும் சொல்லாமல் படம் கை விடப்பட்டது. இதன் பின்னரே சந்திரமுகியில் நடித்தார், ரஜினி.
மருதநாயகம்
கமலஹாசனின் கனவுத்திரைப்படமாக கருதப்படும் ‘மருதநாயகம்’ படத்துக்கு 1997 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத், பட பூஜையில் பங்கேற்று சிறப்பித்தார்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இந்த படத்துக்கான வசனத்தை சுஜாதாவுடன் இணைந்து கமல் எழுதினார். கமலே இயக்கினார்.. சத்யராஜ், நாசர், பசுபதி,விஷ்ணு வர்தன்,அம்ரிஷ்புரி, நசுருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.சில நாட்கள் ஷுட்டிங் நடந்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டது.
காரணம், பகிரங்கமாக கமலால் பகிரப்படவில்லை. இந்த படத்தை கமலுடன் இணைந்து தயாரிப்பதாக உறுதி அளித்த வெளிநாட்டு நிறுவனம், பட்ஜெட்டை பார்த்து மிரண்டு போய் பின்வாங்கியதாக கூறப்பட்டது.
சினி மேன்
000