பாரதிராஜாவை சினிமாவுக்கு தந்த ராஜ்கண்ணு கடைசி நாட்கள்.

ஜுலை,12-

தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.

தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான்.

1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் உச்சங்களை எட்டுவதற்கு, உரம் போட்ட  படமும் கூட . இவர் தயாரித்த கிழக்கே போகும் ரயிலில் தான் ராதிகா, சினிமா வாழ்க்கையை  தொடங்கினார்.

இவர் தயாரித்த சில படங்கள் வணிக ரீதியிலான வெற்றியை கொடுக்காததால் கொஞ்சகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் “மகாநதி’ படத்தைத் தயாரித்தார்

கடைசியாக சூர்யாவை வைத்து பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது .வறுமையில் வாடினார்..

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவுக்கு  ராடன் டி.வி.யில் கவுரமான பொறுப்பு ஒன்றை கொடுத்து கணிசமான ஊதியமும் வழங்கினார், ராதிகா.

தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த. ராஜ்கண்ணு கடந்த மே மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷனும் நடத்தப்பட்டது.

தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கலங்கி நின்ற ராஜ்கண்ணுவுக்கு ராதிகாவும், நடிகர் ராஜேஷும் உதவினர். உடல்நலம் குன்றியிருந்த ராஜ்கண்ணு இன்று காலமானார்.

77 வயதில் 16 வயதினிலே தயாரிப்பாளர் மரணம் அடைந்த நிகழ்வு, கோடம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் அதிர்ச்சி அடைந்துள்ள பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,‘ 16 வயதினிலே திரைப் படத்தில் என்னை இயக்குநராக அறிமுகம் செய்து என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளி திரு. எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மறைவு பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது,அவரது மறைவு எனக்கும் என் குடும்பத்துக்கும் பேரிழப்பு’என உருகியுள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *