மட்டரகமாக ஒருவரை விமர்சிக்கும் போது ‘பிச்சைக்காரன்’ என சொல்வது அநேகரின் பயன்பாட்டில் உள்ள வார்த்தை.ஆனால் சில பிச்சைக்காரர்களின் வாழ்க்கை , நம்ப முடியாத வகையில் இருப்பது நிஜம். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, சில்லறைக்காக நூறு , இருநூறுக்கு பலர் பிச்சைக்காரர்களிடம் ’கையேந்தி’ நின்ற வரலாறுகள் இங்கே உண்டு.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்த விஜய் ஆன்டணியை நினைவு கூறும்போது அனைவருக்கும் முதலில் பளிச்சிடுவது ’பிச்சைக்காரன்’ சினிமாதான்.
இதயநோயாளிகளுக்கு உடனடியாக ‘அட்டாக்’ ஏற்படுத்தும் வகையிலான செய்தியை இப்போது பார்க்கலாம்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பாரத்ஜெயின், பிழைப்புக்காக தேர்ந்தெடுத்த தொழில் ’பிச்சை’.மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே சிறுவனாக இருந்த போதே தொழிலை ஆரம்பித்தார்,பாரத்.
தொடக்கத்தில் பெரிய வரவேற்பு இல்லை.நாளாக ஆக ‘வியாபாரம்’ களை கட்டியது. இன்றைய தேதியில் பாரத், நாளொன்றுக்கு 2,500 ருபாய் சம்பாதிக்கிறார். மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ‘வேலை நேரம்’ 12 மணி நேரம்.
இவரது சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய். மும்பையில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு சொந்தமாக உள்ளது.தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.அதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.இருவரும் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.‘உழைத்தது போதும்’என மனைவியும், குழந்தைகளும் பலமுறை சொல்லி விட்டார்கள். இவர் மறுத்து விட்டார்.
கண்ணை மூடுவதற்குள் இன்னும் சில கோடிகள் பார்த்து விட வேண்டும்என்பது பாரத் ஜெயினில் கனவாக இருக்கலாம்.
000