ஜுன்.20 – பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இருந்து நியூ யார்க் செல்லும் பிரதமர் அங்கு 21- ஆம் தேதி அன்று ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடை பெறும் உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேல் மில் பென் கலந்து கொண்டு பாட உள்ளார்.
இதன் பிறகு பிரதமர் மோடி நியூ யார்க்கில் இருந்து அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் தரப்படும் முறைப்படியான வரவேற்பை பெற்றுக் கொண்ட பிறகு அதிபர் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கால நிலை மாற்றம், எரிசக்தி துறை போன்றவை தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று இரவு மோடிக்கு ஜோ பைடன் சிறப்பு விருந்து அளித்து பெருமை செய்கிறார்.
நாடளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூடத்திலும் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். அவர் இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு இதே போன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். இது அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும் கவுரவமாகும்.
மோடி வாஷிங்கடனில் இருக்கும் போது முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதுப் பற்றிய தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.
டெஸ்லா என்ற புகழ்பெற்ற கார்களை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், இந்தியாவில் கார் தயாரிப்பைத் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த மாநிலத்தில் அந்த ஆலையை அமைப்பது என்பதை மஸ்க் வெளியிடவில்லை.
இதனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் அந்த ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கார் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டுக்கு டெஸ்லா ஆலை வரவேண்டும் என்பது இங்கு உள்ளவர்களின் விருப்பமாகும்.
இந்த எதிர்பார்ப்புகள் இடையே பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா ஆலை அமையவிருக்கும் மாகாணம் பற்றிய கருத்துப் பறிமாற்றங்கள் இருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
டெஸ்லா கார் ஆலை தமிழ்நாட்டுக்கு வருமா,, அல்லது வேறு எங்குப் போகும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.