ஜுன்- 29. டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்றிரவு ( புதன் கிழமை இரவு) நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கூட்டம் நடைபெற்று உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர்,தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலத்தில் ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவான விவாதங்கள் கூட்டத்தில மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் இரண்டு தினங்களுக்கு முன்பு போபாலில் நடைபெற்ற பாரதீய ஜனதா கூட்டத்தில் நாட்டிற்கு இரண்டு சிவில் சட்டங்கள் தேவையற்றது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் தேவை என்று பேசியிருந்தார். இந்த கருத்தை பாரதீய ஜனதா கட்சி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் பிரதமர் இப்போது பேசியிருப்பதால் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது பற்றியும் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
பாட்னாவில் கடந்த 23-ஆம் தேதி 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக செயல்படுவது குறித்து விவாதித்தனர். அவர்கள் மீண்டும் சிம்லாவில் கூடி வியூகம் வகுக்க உள்ளனர்.
இந்த சூழலில் பிரதமர் நடத்தியுள்ள ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
000