பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு, அதாவது புத்தாண்டு பிறப்பின் போது அதிகம் பேர் ஆர்டர் செய்த உணவு, பிரியாணி என்று தெரிவித்து இருக்கிறது. நாடு முழுவதும் அன்று இரவு அவர்களுக்கு வந்த பிரியாணிகளின் ஆர்டர் மட்டும் முன்றரை லட்சமாம். அதற்கு அடுத்தபடியாக இரண்டரை லட்சம் ஆர்டர்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது பீட்சா.
ஸ்விகி அறிக்கைபடி இன்றயை தலைமுறையின் விருப்ப உணவில் பிரியாணி முதலிடத்தை பிடித்து இருப்பது உறுதியாகிவிட்டது.
அதுவும் பிரியாணி கேட்டு ஆர்டர் செய்தவர்களில் அதிகம் பேர் விரும்பியது ஐதராபாத் பிரியாணி என்று சொல்லி இருக்கிறது ஸ்விகி.
இந்த ஐதராபாத் பிரியாணியின் வரலாற்றைப் பார்த்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. கி.பி.1630 ஆம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் ஐதராபாத் வந்தது. அதன் பிறகு அவர்களின் மேலாண்மையின் கீழ் நிஜாம் என்ற ஆட்சி மரபு தொடங்கியது. சுருக்கமாகச் சொன்னால் முகலாய பேரரசின் கீழ் நிஜாம் என்ற சிற்றரசர்கள் ஆளத்தொடங்கினார்கள்.
இவர்களில் ஒரு நிஜாமின் சமயலறையில் தான் இந்த பிரியாணி தயாரானது. அதாவது பாசுமதி அரிசியையும் ஆட்டு இறைச்சியையும் ஒரே பாத்திரத்தில் வைத்து உரிய மசாலாப் பொருட்களை கலந்து வேகவைப்பது. ஐதராபாத் பிரியாணிக்கு தம் பிரியாணி என்று இன்னொரு பெயரும் உண்டு.
பிரியாணிக்கு இன்னாரு வரலாறும் இருக்கிறது.போர் முனையில் உள்ள வீரர்களுக்கு குழம்பு போன்ற திரவ உணவுகளைக் கொண்டுச் சென்று கொடுப்பது கடினமான காலம் அது. மேலும் வீரர்களுக்கு சத்தான உணவை கொடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது. இது பற்றி யோசித்தவர்களின் மனதில் அரிசியையும் கறியையும் ஒன்றாக வேகவைத்து கொடுத்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். அதன் பிறகு அதனுடன் சுவைக்காக மசாலாப் பொருட்களை சேர்த்து வேகவைத்துப் பார்த்த போது கிடைத்த பிரியாணி மற்றைய மாமிச வகை சமையல்களை விட்டு சுவையாக இருந்துள்ளது. இலைகளில் பொட்டலமாக கட்டி எடு்த்துச் சென்று ஆளுக்கு ஒன்று என்று கொடுத்துள்ளனர்.
பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி வலுவானாலும் கூட பிரியாணி ஐதராபாத்தை விட்டு அகலாமல் பொதுமக்களின் உணவாக மாறி விட்டது.
இன்று ஐதராபாத் பிரியாணி என்பது இந்தியா எங்கும் கிடைக்கும் உணவாக இருக்கிறது. அதன் பிறகு பிரியாணியை அவரவர் தம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப பல முறைகளில் செய்து புதுப்பேர்களை சூட்டி விட்டனர்.
ஆரம்பத்தில் ஆட்டு இறைச்சியைக் கொண்டு பிரியாணியை சமைத்தாலும் பிற்காலத்தில் கோழிக்கறி, மாட்டு மாமிசம், இறால், வான் கோழி என்று மற்ற இறைச்சிகளைக் கொண்டும் தயாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
இத்தாலிய உணவான பீட்சா என்பது கோதுமை அல்லது மைதா மாவு அடையுடன் மாமிசம் அல்லது காய்கறிகளை கலந்து ஒரே பொருளாக வழங்கப்படுகிறது. அதனால் இதுவும் எடுத்துச் சென்று விநியோகிப்பதற்கு சவுகரியமான உணவாக திகழ்கிறது.
வழக்கமான உணவு முறையில் நாம் நான்கைந்து பதார்த்தங்களை கலந்து சாப்பிட வேண்டியுள்ளது. ஆனால் பிரியாணியும் பீட்சாவும் அப்படி இல்லை பாருங்கள். அதுவும் கூட இன்றைய தலைமுறை இவற்றை விரும்புவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.