செப்டம்பர்,11-
கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு எப்போதுமே ஜுனியர் பார்ட்னர்களால் தொல்லை தான்.பீகாரில் ‘இந்தியா’கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும், ஆர்.ஜே.டி.தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும், தோழமை கட்சிகளால் கூடுதல் இம்சை உருவாகியுள்ளது.
பீகாரில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் நிதிஷ் கட்சி கூட்டு வைத்திருந்தது.லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் இவர்களுடன் இருந்தார். மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 39 இடங்களை இந்த கூட்டணி அள்ளியது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஆர்.ஜே.டி போட்டியிட்டது. காங்கிரஸ் மட்டும் ஒரு இடத்தில் வென்றது. இப்போது கூட்டணியில் தலைகீழ் மாற்றம். பாஜகவுடன் லோக் ஜனசக்தி உள்ளது. சில சின்ன கட்சிகளும் உண்டு.
எதிர் முகாமில் ஐக்கிய ஜனதா தளம் ,ஆர்.ஜே.டி, காங்கிரஸ், மற்றும் 3 இடதுசாரி கட்சிகள் உள்ளன. 30 இடங்களை சரி பாதியாக ஐக்கிய ஜனதா தளமும், ஆர்ஜேடியும் பங்கிட்டு, எஞ்சிய 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்பது நிதிஷ்,லாலு ஆகியோரின் திட்டம். ஆனால் ’9 இடங்கள் எங்களுக்கு வந்தாக வேண்டும்’ என பிடிவாதமாக உள்ளது, காங்கிரஸ். சட்டப்பேரவையில் இந்த கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.அந்த மாநிலத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ .ஆகிய கட்சிகளை காட்டிலும் வலிமையாக உள்ள சி.பி.ஐ (எம்.எல்.)கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அந்த கட்சி 3 தொகுதிகளை கேட்கிறது. எஞ்சிய இரு கம்யூனிஸ்ட் களும் தலா இரு தொகுதிகளை கேட்கிறார்கள். இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை கட்டமைத்த நிதிஷ்குமார், தனது சொந்த மாநிலத்தில் விழி பிதுங்கி நிற்கிறார்.
‘நாற்பதும் நமதே’ என சில நாட்களுக்கு முன் முழக்கமிட்ட லாலுவும், ‘அப்பத்தை எப்படி பிரித்து கொடுப்பது?’ என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். இந்த பஞ்சாயத்துக்கு டெல்லியில் தான் தீர்வு கிட்டும் என தெரிகிறது.
000