மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்கடந்த 23- ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார்.இதில் 17 கட்சி தலைவர்கள் பங்கேற்று கரம் கோர்த்ததால் , பா.ஜ.க. தலைமை மிரண்டு போனது.
அடுத்த கூட்டம் பெங்களூருவில் இந்த மாதம் 17 மற்றும் 18- ஆம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆரம்பம் முதல் முனைப்பு காட்டி வரும் சரத்பவாருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துள்ளது.
கட்சியில் சரத்பவார், தனது மகள் சுப்ரியா சுலேவை முன்னிறுத்தியதால் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் கோபத்தில் இருந்தார். அவரை தூண்டில் போட்டு பா.ஜ.க.தன் பக்கம் இழுத்து விட்டது. 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார்,தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் கரம் கோர்த்துக்கொண்டார்.மகாராஷ்டிர பா.ஜ.க. கூட்டணி அரசில் இணைந்த அவருக்கு, பம்பர் பரிசாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொற்றிக்கொண்டு வந்த 8 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு, சரத்பவாருக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்டுள்ள மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கட்சியிலும் இது போன்ற பிளவை பா.ஜ.க. நிகழ்த்துமோ? என அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதால்வே, ‘தவுசண்ட்வாலா ‘ பட்டாசை கொளுத்தி போட்டுள்ளார்.
‘மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற அரசியல் சூழ்நிலை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உருவாகும்.பீகாரில் ஆர்.ஜே.டி.யுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைத்துள்ளதால் அவரது ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். உ.பி.யில் சமாஜ்வாதி கூட்டணியில் இருக்கும் ஆர்.எல்.டி. கட்சி, பா.ஜ.க.வுடன் கை கோர்க்க தயாராகி விட்டது’’ என அதால்வே தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநில பாரதீய ஜனதாவின் முன்னணி தலைவரான சுசில் குமார் மோடியும் இதே கருத்தை தெரிவித்து இருக்கிறார். அவர், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கியம் ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களோடு தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளார்.
மகாராஷ்டிர மாற்றம், எதிர்க்கட்சிகள் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால், பெங்களூரு கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? பாட்னா கூட்டத்தில்,பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களா? என கேள்விகள் எழுந்துள்ளன.
அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்ற கவுண்டமணி வசனத்தை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
000
000