May 28,2023
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டட பணிகளை மேற்கொண்டது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் இன்று திறப்பு விழா நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா காலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து மக்களவையில் செங்கோலை பிரதமர் மோடி நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது . காலை 9.30 மணிக்கு சர்வ மத பிராத்தனை நடைபெறுகிறது. இதனையடுத்து நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற உரைகளின் சிறு தொகுப்பு ஒளிபரப்பப்படுகிறது. பிற்பகல் ஒரு மணிக்கு புதிய 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார். பிற்பகல் 1.10 மணிக்கு பிரதமர் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம். நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாஜக, அதிமுக, பாமக, தமாகா, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 25 கட்சிகள் பங்கேற்கின்றன.