மே.24
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து, திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடமானது 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.
இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கட்டுமான பணி முடிந்து, தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் அறிக்கையும் வெளியிட்டனர். மேலும், வரும் 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதலாக கோபத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பான அழைப்பிதழ்கள் ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ந் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும் என்றும், பிற்பகலில் திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழை பெற்றவுடன் கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால், திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. முறைப்படியான அழைப்பிதழ் கிடைத்த பிறகு, இதுதொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.
மேலும், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும் முதல் ஆளாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.