ஏப்ரல் 15
புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு – காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் இப்போது கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதன் முழுப் பின்னணி இதோ!
2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையின் ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதல் குறித்து யார் விமர்சனம் செய்தாலும், அவரை தேசவிரோதி என்று முத்திரை குத்தி பா.ஜ.க-வினர் குதறுவது வழக்கமாக இருக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் கழித்தும் இன்னமும் அதன் ரணம் மக்கள் மனத்தில் ஆறவில்லை. இந்தச் சூழலில், புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு – காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் இப்போது கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தும் அளவுக்கு அதிர்ச்சித் தகவல்கள் கொண்டதாக இருக்கிறது.
”அப்போது மத்திய உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமும் சி.ஆர்.பி.எஃப் படையின் பொறுப்பற்ற நடவடிக்கையுமே காரணம்.
அதன்பின் நெடுஞ்சாலை வழியே வீரர்கள் வந்தனர். அந்த நெடுஞ்சாலையைத் தொடும் இணைப்பு சாலைகளும் மூடப்படவில்லை. சாலையும் பாதுகாக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி.
சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் அந்தக் கார் 10, 12 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எல்லையிலிருந்து பல சோதனைச் சாவடிகளைக் கடந்து வந்து அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை. சம்பவம் நடந்தபோது பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் இருந்தார். அங்கிருந்து வெளியில் வந்ததும் என்னிடம் பேசினார்.
`வீரர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால் இது நடந்திருக்காது. நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது’ என்று பிரதமரிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, அதுபற்றிப் பேசாமல் அமைதியாக இருக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதையே சொன்னார்.
காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கிய 90’களில் இருந்தே, அங்கு முன்னாள் அதிகாரிகளே கவர்னர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் அரசியல்வாதி வந்தபோது, காஷ்மீரில் ஜனநாயகப் பாதையை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு நம்பிக்கை இருப்பதாக பலர் நினைத்தனர். மாலிக் ஓராண்டு காலம் அங்கு இருந்தார். அவர் வந்த ஐந்து மாதங்களில் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தது. 2019 தேர்தலுக்குப் பின் இரண்டாம் முறையாக மோடி அரசு பதவியேற்றதும், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து அகற்றப்பட்டு அது யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலிக் கோவா கவர்னராக ஆக்கப்பட்டு, அங்கிருந்து மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார்.
கவர்னராக இருந்தபோதே மோடி அரசு குறித்து கடும் விமர்சனங்களை வைத்தவர் சத்யபால் மாலிக். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசி, மத்திய அரசைக் குறை சொன்னார். 2022 அக்டோபரில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதன்பின் இன்னும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
இந்தச் சூழலில்தான் அவரின் பேட்டி வெளியாகியுள்ளது.
”நான் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தபோது ஒருநாள் காலை 7 மணிக்கு பா.ஜ.க தலைவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ராம் மாதவ் என்னை சந்திக்க வந்தார். ஒரு நீர் மின்சாரத் திட்டத்துக்கு நான் உடனடியாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றார். அத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை காஷ்மீரில் செயல்படுத்தவும் அனுமதி கொடுக்கச் சொன்னார். இரண்டுக்கும் நான் ஒப்புதல் அளித்தால் எனக்கு 300 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் சிலர் பேரம் பேசினார்கள். தவறான எந்த விஷயத்துக்கும் நான் துணை போக மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்” என்கிறார் சத்ய பால் மாலிக்.
”ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் சில முறைகேடுகளைத் தடுத்தபோது மோடி என்னைப் பாராட்டினார்” என்று சொல்லும் சத்ய பால் மாலிக், ”அதேசமயம் ஊழலை ஒரு பெரிய விஷயமாக மோடி பொருட்படுத்துவதில்லை” என்றும் குண்டு வீசுகிறார்.
”இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், ஜம்மு காஷ்மீரின் சூழல் குறித்து பிரதமர் மோடி இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அதன் மாநில அந்தஸ்தைப் பறித்தது தவறு. உடனடியாக மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும்” என்கிற அவர், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முடிவைக் கடைசி நிமிடம் வரை கவர்னரான தனக்குச் சொல்லாமல் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.
”மூன்றாம்தர மனிதர்களை இந்த அரசு கவர்னர்களாக நியமிக்கிறது. பி.பி.சி ஆவணப்பட விவகாரத்தையும் மத்திய அரசு பக்குவத்துடன் கையாளவில்லை. மோடி அரசின் அமைச்சர்கள் பலரும் இஸ்லாமியர்களை அணுகும் விதமும் சரியில்லை. ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் செய்ததும் மிகப்பெரிய தவறு. அதானி விவகாரத்தால் கிராமங்கள் வரை பா.ஜ.க-வின் பெயர் கெட்டுப் போயிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒற்றை வேட்பாளரை பா.ஜ.க-வுக்கு எதிராக நிறுத்தினால், பா.ஜ.க மண்ணைக் கவ்விவிடும்” என்றெல்லாம் சரமாரியாக அடுக்கும் சத்ய பால் மாலிக், தன் பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை என்றும் கூறுகிறார்.
”பாகிஸ்தானிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எனக்கு Z+ பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் என் வீட்டுக்கு ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டுமே பாதுகாப்புக்கு இருக்கிறார். என்றாலும் எதைக் குறித்தும் நான் கவலைப்படவில்லை.