பூடான் நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் இன்று பூடான் மன்னர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
நேற்று இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்-விற்கு டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-பூடான இடையேயான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இன்று டெல்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் முக்கியத் தலைவர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “பூடான் மன்னரின் இந்த 2 நாள் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.