பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் – பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதில் பேசிய அவர், “கடலூர் விருத்தாசலம் நகரத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்குழந்தை திடீரென வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளது.
அக்குழந்தையை பரிசோசித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விருத்தாச்சலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்தான் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை அந்த பெண் குழந்தை உறுதிபடுத்தியுள்ளது. குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர் அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் இதுவரை கைது செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற கொடுங்குற்றம் புரிந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே, அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *