லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கியுள்ள படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
கடந்த 6 ஆம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’, முதல் நாளில் தமிழகத்தில் ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் அஜித் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
படம் போகாததால், ‘லைகா’ நிறுவனமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இந்த சூழலில் படத்தின் டைரக்டர் மகிழ் திருமேனி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அறிக்கை விவரம்:
‘அஜித் குமார் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு இதயம் நிறைந்த நன்றி. ஆரம்ப சந்திப்புகளில் பெண்களை மதிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக கூறுவார். எளிய குடும்ப பின்னணியில் வளர்ந்த எனக்கு இதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.
பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதனால், அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருந்தாலும் அஜித் போன்ற மாஸ் நடிகருக்கான சில கமர்ஷியல் விஷயங்களை ரசிகர்கள் திரையில் எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.
ஆனால், அஜித் சார் என்னிடம் ,’ இந்தக் கதை அர்ஜுன் என்ற மிடில் கிளாஸ் மனிதனைப் பற்றியது. வேறு வழியே இல்லை என்றால் தவிர வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைக்காதவன் அர்ஜுன். சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். அந்த நம்பிக்கை சரியானது என்பது படம் வெளியானதும் என்னால் உணர முடிகிறது.
படத்துக்கு கிடைக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் இயக்குநருக்கு நிறைவான விஷயம். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சியாக உள்ளது’.
இவ்வாறு மகிழ் திருமேனி வெளியிட்ட அறிக்கையில் மகிழ்ந்துள்ளார்.
ஆனால் படம் சம்மந்தப்பட்டவர்கள், மகிழ்ச்சியாக இல்லையே சார்!