ஆகஸ்டு,08-
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021 ஆம் ஆண்டு வெளியேறின.
அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர்.
‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’ என்று உறுதியளித்தனர். ஆனால்,அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் பெண்கள் பூங்கா, ஜிம், அழகு நிலையங்கள், காட்சிக் கூடங்கள் செல்லவும் தலிபான் அரசு தடா போட்டது
இது தவிர, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதையும் தலிபான்கள் நிறுத்தினர்.
இப்போது உச்சக்கட்ட அராஜகமாக மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. தலிபான்களின் இந்த அடக்குமுறை உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ooo