ஜுலை, 30-
இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
அந்த ஆற்றின் குறுக்கே உள்ள தபலேஸ்வரன் அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும்.
கடந்த மாத வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் மீண்டும் வெள்ள அபாயத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோதாவரியில் தற்போது 10.37 லட்சம் கனஅடி நீர்வரத்து உள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆற்றங்கரையோரம் உள்ள மாவட்டங்களின் அதிகாரிகளை நாங்கள் எச்சரித்துள்ளோம்” என்று கூறினார்.
மீட்புப் பணிகளுக்காக அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் NDRF மற்றும் SDRF ஆகியவற்றின் தலா ஒரு குழு நிறுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், பத்ராசலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தண்ணீர் தொடர்து வந்தபடி இருக்கிறது.கோதாவரியின் கிளை நதிகளான சபரி போன்றவற்றிலும் மழை பெய்து வருவதால் அதிகளவு நீர்வரத்து உள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி மாநிலத்தி்ன் ஏனாம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளான குருசம்பேட்டா, பரம்பேட்டா, பிரான்ஸ் பேட்டா, கைரிலாக் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது.
000