ஆகஸ்தடு, 13-
தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த்.
அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார்.
குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.அவருக்கு பின்னால் வந்த விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்றோராலும் ரஜினியை முந்தி செல்ல முடியவில்லை.
விஜய், அஜித் ஆகியோரின் வருகை, ரஜினியை லேசாக அசைத்து பார்த்தது.2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கலை யொட்டி ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் இருவர் படமும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்தன.
எந்திரனுக்கு பிறகு ரஜினி ரசிகர்களை கவர்ந்த படமாக பேட்ட இருந்தாலும், அதனை ஒரு படி தாண்டி விஸ்வாசம் வெற்றி பெற்றது.
தனது அரை நூற்றாண்டு சினிமா பயணத்தில், தனக்கு மிகவும் ஜுனியரான அஜித்திடம் வீழ்ந்தது ரஜினிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.விஸ்வாசத்தை கொடுத்த டைரக்டர் சிறுத்தை சிவாவை அழைத்து பேசினார் ரஜினி. உடனடியாக, தனக்கு கதை ரெடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிவா இயக்கத்தில் உருவானது, அண்ணாத்த. சட்டென்று ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினி, கொரோனா விசுவரூபம் எடுத்து தாண்டவமாடிய அந்த நேரத்திலும் ,தனது உடல் நிலையை பொருட்படுத்தாமல் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொடுத்தார்.
ஆனால் படம் வெற்றி பெறவில்லை. ரஜினிகாந்த் துவண்டு போனது உண்மை.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி, இந்த தருணத்தில்.’அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என அவரது ரசிகர்களும், கோடம்பாக்கத்தில் சிலரும் கொளுத்திப்போட்டனர்.
கோபம், துக்கம் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாக யோசித்தார். ஒரு மாபெரும் வெற்றிப்படம் கொடுப்பதன் மூலமாகவே இவர்களுக்கு பதிலடி தரமுடியும் என நம்பினார், ரஜினி.
மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே கால்ஷீட் கொடுத்தார்.
விஜய்க்கு பீஸ்ட் எனும் தோல்வி படத்தை அளித்த நெல்சனே, தனது படத்தை இயக்கட்டும் என பச்சைக்கொடி காட்டினார், ரஜினி.( பீஸ்ட் ரிலீசுக்கு முன்னரே ரஜினி படத்துக்கு நெல்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.) ஜெயிலர் உருவாக்கத்தின் போது அடித்தல்- திருத்தல், பெருக்கல் என படம் வளர வளர பல இடைச்செருகல்கள். ரஜினி ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.
மேக்கிங்கின் போதே ஜெயிலர் வெற்றிப்படம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.முழுப்படத்தை பார்த்து, முழு திருப்தி அடைந்த பிறகே கேசட் ரிலீஸ் தொடக்கவிழாவுக்கு ஓகே சொன்னார்.விழாக்களில் ரஜினி சொல்லும் குட்டிக்கதைகளில், யாரையும் குத்திக்காட்டும் ஜோடனைகள் இருக்காது.அதனை ரஜினி விரும்புவது இல்லை.
ஆனால் காலத்தில் கட்டாயத்தால் ,தன்னை கழுகு என உருவகப்படுத்திகொண்டு, சிலரை காக்கா என கீழிறக்கினார்.’ஜெயிலர் இன்னொரு பாட்ஷா’ என முழக்கமிட்டார்.அவர் நினைத்து எல்லாம் நடந்து விட்டது.
ஜெயிலர் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 52 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதற்கு முந்தைய ரிகார்டு -’பொன்னியின் செல்வன் -2’ முதல் நாளில் வசூலித்த 32 கோடி ரூபாய்.
தமிழ்நாட்டில் மட்டும் 900 தியேட்டர்களில் ஜெயிலர் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, ஜெயிலர்.
பொன்னியின் செல்வனை, ’ஜெயிலர் ’முத்துவேல்பாண்டியன் எளிதாக வீழ்த்திவிட்டார் என்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.
பாண்டியனா, கொக்கா?