போக்குக் காட்டும் 11 கட் சிகள்.. வலை வீசும் கூட்டணிகள்.. பலம் என்ன?

ஜுலை, 20-

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை)  ஒரே நாளில் கூடி ஆலோசனை நடத்தின.

காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 38 கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த இரு கூட்டணிகளிலும் இணையாமல் 11 கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளுக்கு மக்களவையில் இப்போது 91 எம்.பி.க்கள் உள்ளனர்.

அந்த கட்சிகள் விவரம்:

  1. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்,

2.பிஜு ஜனதாதளம்,

3.பாரத ராஷ்டிர சமிதி,

4.மதச்சார்பற்ற ஜனதாதளம்,

5.பகுஜன் சமாஜ் கட்சி

6.அகில இந்திய மஜ்லிஸ் கட்சி

7.தெலுங்கு தேசம்,

8.அகாலி தளம்,

9.அகாலிதளம் (மான்),

10.ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி

11.அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி.

மூன்று மாநிலத்தில் ஆளும் கட்சி

11 கட்சிகளில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், ஒடிசாவில் பிஜு ஜனதாதளமும் ஆளுங்கட்சியாக உள்ளன.

ஒடிசாவை தளமாக கொண்டு இயங்கும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தில் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலமைச்சராக இருக்கிறார்.அங்கு மொத்தம்  21 நாடளுமன்றத் தொகுதிகள் உள்ளன.கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வென்றது. இன்றைக்கும் ஒடிசா மாநிலம் நவீன் , கோட்டையாகவே உள்ளது. இரு கூட்டணிகளிலும் நவீன் இணையப் போவதில்லை. அதே நேரம், மோடிக்கு எதிராகவும் செயல்பட மாட்டார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆரம்பித்த கட்சி,தெலங்கானா ராஷ்டிர சமிதி.சுருக்கமாக டி.ஆர்.எஸ். சில மாதங்களுக்கு முன் ராவுக்கு பிரதமர் ஆசை தோன்றியது .இதனால் தனது கட்சி பெயரை பாரத ராஷ்டிர சமிதி ( பி.ஆர் .எஸ்) என மாற்றினார்.

பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாம் அணி அமைத்து, பிரதமராகலாம் என  அவர்  கனவில் மிதந்தார். ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அரும்பாடு பட்டு பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, ராவ் கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்.

அந்த மாநிலத்தில் மொத்தம்  17 தொகுதிகள்.கடந்த தேர்தலில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தார்,இவரது கட்சி 9 இடத்தில் ஜெயித்தது.ஒவைசி ஐதராபாத்தில் வென்றார்.பாஜக நான்கு இடத்திலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றது. சந்திரசகேர ராவ் ஆட்சி மீது பொதுமக்கள் மட்டுமின்றி, அவரது கட்சியினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பி.ஆர்.எஸ்.கட்சி நிர்வாகிகள், காங்கிரசில் ஐக்கியமாகி வருகிறார்கள்.இது- மக்களைவை தேர்தலில் சந்திரசேகர ராவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆந்திர முதலமைச்சராக இருக்கும்  ஜெகன்மோகன் ரெட்டி ஆரம்பித்த கட்சி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். மூத்த காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் தான், ஜெகன்.

முதலமைச்சராக இருந்தபோது ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். தந்தை வகித்த முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜெகன்.மேலிடம் கொடுக்கவில்லை.

இதனால் தந்தை பெயரில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை தொடங்கி,ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டி விட்டார். அந்த மாநிலத்தில் மொத்தம் 25 தொகுதிகள்.கடந்த தேர்தலில் இவரது கட்சி 22 இடங்களில் வென்றது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே.

பாஜக,காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் பூஜ்யம். இந்த முறையும் முடிவு அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

மாயாவதி- தேவகவுடா

பிரதமராக இருந்த தேவகவுடா கட்சியும், உ.பி . முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்த மாயாவதி கட்சியும் இன்று செல்லாக்காசாகி விட்டன.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கடந்த மக்களவை தேர்தலில் 10 இடங்களில் வென்றது. ஆனால், அதன் பின்னர் நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.  இரு அணியிலும் இணையாத மாயாவதி,’ மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்’ என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார்.

The Chief Minister of Karnataka, Shri H.D. Kumaraswamy meeting the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, Shri Ram Vilas Paswan, in New Delhi on October 06, 2018.

கர்நாடகத்தின் சில பகுதிகளில் மட்டுமே தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு உள்ளது. தேவகவுடாவுக்கு வயதாகி விட்டதால் அவர் மகன் குமாரசாமி தான் இப்போது கட்சியை கவனித்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்.

அண்மையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது பிரச்சாரக்கூட்டங்களில் ‘எந்த கட்சி வென்றாலும் நானே முதல்வர்’ என முழக்கமிட்டார். இவரது கட்சி படுதோல்வி அடைந்ததால், மக்களவை தேர்தல் கூட்டணிக்கு எந்த அணியும் இவரை சீந்தவில்லை.

கடந்த காலங்களில் பாஜக அணியில் இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திராவில் இன்னும் செல்வாக்கு உள்ளது.இப்போதைக்கு தனித்து நிற்கும் அந்த கட்சியுடன், பாஜக மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ( ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் ஒவைசி , ஐதராபாத் மக்களவை தொகுதியில் இருந்து பலமுறை தேர்வானவர். ஆந்திராவை தளமாக கொண்டு இயங்கும் இந்த கட்சிக்கு அங்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது.

மோடி அரசில் அங்கம் வகித்த சிரோமணி அகாலிதளம், மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , ஆட்சியில் இருந்தும், என்.டி.ஏ.கூட்டணியில் இருந்தும் விலகியது. பஞ்சாபை தளமாக கொண்டு இயங்கும் இந்த கட்சி, அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி வளர்ந்ததால் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது.

எந்த அணியிலும் ஒட்டாமல் நிற்கும்  11 கட்சிகளில்  தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய மூன்று கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் பாஜக அணியில் ஐக்கியமாகலாம்.

எஞ்சிய 8 கட்சிகள் தனித்து நிற்கும் வாய்ப்புகளே உள்ளன.

கடைசி நேர மனமாற்றங்கள் நிகழ்ந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *