ஆகஸ்டு.04-
திருநெல்வேலி டவுன் காவல்நிலையத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா.
இவர் தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பகுதிக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். நெல்லையப்பர் கோயிலில் இருந்து ஆர்ச் வரை உள்ள ஒரு வழி பாதையில் அவரது வாகனம் சென்றது. அது, ஒரு வழிப்பாதை என்பது சுப்பையாவுக்கு நன்றாக தெரியும்.
விதியை மீறுகிறோம் என்பதும் தெரியும். அவரது கெட்ட நேரம் , காவல்துறை ஆணையர் வடிவத்தில் வந்தது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஜங்ஷனில் இருந்து அந்த நேரத்தில் டவுன் பகுதியை நோக்கி வாகனத்தில் வந்துள்ளார்.
உதவி ஆணையர் சுப்பையா , விதியை மீறி ஒரு வழிச்சாலையில் செல்வதை கவனித்தார். அந்த பகுதியின் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லத்துரையை வயர்லெஸ்சில் தொடர்பு கொண்டார். உதவி ஆணையர் சுப்பையா வந்த காவல்துறை வாகனத்திற்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
காவல் துறைக்கு சொந்தமான, அந்த வாகனத்திற்கு, போக்குவரத்து விதியை மீறியதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை ஏ.சி. சுப்பையா செலுத்தினார்.
விதியை மீறி சென்றதால் உதவி ஆணையர் சுப்பையா மற்றும் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுனர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாழ்த்துகள் ஆணையரே!
000