போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஜூன் முதல் 2020 ஜூலை வரை மதுரை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்தார் டேவிட்சன் ஆசீர்வாதம். அப்போது, வெளிநாட்டினருக்குப் பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு என குற்றம்சாட்டப்பட்டது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தொடர்பாக டேவிட்சன் ஆசீர்வாதம் மீது இந்தியன் ரிப்போர்டர் இதழின் ஆசிரியர் வாராகி என்பவர் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், வாராகி அளித்த புகாரின் அடிப்படையில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
- உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.