ஜூன் 29
மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் தமிழகம் எங்கும் வெளியாகி உள்ளது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.குறிப்பாக வடிவேலுவின் குரலில் வெளியான, ராசா கண்ணு பாடல் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது.
நேற்றுவரை படத்தை வெளியிட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மாமன்னன் படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வருகின்றது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இது என்பதால், படக்குழுவினர் மாமன்னன் படத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு ஷோவாக போட்டு காண்பித்துள்ளனர். அப்போது படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக வந்திருப்பதாக தன்னை கட்டித்தழுவியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில் “மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கட்டித்தழுவி கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் மரியாதை கலந்த நன்றியையும், பிரியத்தையும் சமர்ப்பிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகியோரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
000