ஜுலை, 24-
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது..
பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை.தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகும்.
மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம்.
காலையில் பசியோடு வரும் பிள்ளைகள் எப்படி கல்வி கற்க முடியும் என்பதை மனதில் கொண்டு தொடங்கப்பட்டதே காலை உணவுத் திட்டம். அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதே போன்று மகளிர் உரிமைத் தொகை திட்டமும் சிற்ப்பாக செயல்படுத்தப்படும்,
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.