—–
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீபிரியங்காநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர்கள்லால்,எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் வருகிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் தங்கர் பச்சான் கலந்து கொண்டு, நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்.தமிழகத்தில் நிலவும் சாதிபாகுபாட்டை விமர்சித்தவர், தமிழ் சினிமாக்களையும் ஒரு பிடி பிடித்தார்.அவரது ஆவேச உரை:
‘கிராமத்தில் இருந்து நான், 14 வயதில் சென்னைக்கு வந்தேன்.எனது ஊரில் அப்போது நான் பார்த்த சாதிய பாகுபாடு இப்போது இல்லை என்று சொல்ல முடியாது.தமிழ்நாடு முழுக்க சாதி பாகுபாடு உள்ளது.இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.அதிகாரத்தை பெற ஆசைப்படுவர்கள்தான் இதற்கு உயிர் கொடுக்கிறார்கள்.சாதியை வைத்தே அதிகாரத்தை அடைகின்றனர்.
ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலை, பிரிவினையை உண்டு பண்ணுவதல்ல.சமூகங்களை இணைக்க வேண்டும்.வெறும் வலிகளை சொல்லும் படங்களை தாண்டி, சமூகத்தை இணைக்க சொல்லும் படங்கள் வரவில்லை.அடுத்த கட்டமாக அதுதான் வரவேண்டும்.
இப்போது நாங்குநேரி சம்பவத்தை கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.சாதி பிரிவினை, சாதிப்பெருமை, சாதி அடக்குமுறை போன்றவை குறைவது போன்ற படங்கள் வர வேண்டும்.
மசாலாப்படங்களில் என்ன இருக்கிறது?அவை 3 மணி நேர போதை.அவ்வளவுதான்.பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மோசமாக இருந்தாலும்,எப்படி மோசமாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக போகிறார்கள். ஒரு சின்னத்தை பார்த்து வாக்களிப்பது போன்றதுதான், ஒரு நடிகரின் முகத்தை பார்த்து சினிமாவுக்கு செக்வது. மக்கள் நினைத்தால் மட்டுமே சினிமாக்கள் மாறும்’
அரசியல், சாதி மற்றும் சினிமாக்களை ஒரே மேடையில் தங்கர் பச்சான் விளாசி தள்ளியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.வெளியே வந்ததும் அவற்றை மறந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.