செப்டம்பர்,05-
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் உள்ள ஒற்றுமை யாதெனில், இருவருமே அசைவ பிரியர்கள். இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அஜித் அருமையாக பிரியாணி சமைப்பார்.அதுபோல் லாலுவும் மட்டன் கறி வைப்பதில் மடல் வாங்கியவர் என சொல்லலாம்.
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இருவருமே தங்கள் கையால் அசைவ உணவு தயாரித்து, அவர்கள் சாப்பிடுவதை அழகு பார்க்கும் குணம் கொண்டவர்கள் . அஜித் அவுட்டோர் ஷுட்டிங்கிலும் பிரியாணி தயாரித்து யூனிட் ஆட்களுக்கு வழங்குவார்.
லாலு வீட்டில் மட்டுமே மட்டன் சமைப்பார். டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது பீகார் மக்கள் விரும்பி சாப்பிடும்’சம்பிரான் மட்டன்’ சமைப்பது குறித்த செய்முறைகளை ராகுல் காந்திக்கு, லாலு பிரசாத் கற்றுக் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
லாலுவின் அறிவுரைப்படி ராகுல் மட்டன் சமைப்பதும், இருவரும் அரசியல் விஷயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மட்டனுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம் என்று ராகுல் கேள்வி எழுப்ப, அதற்கு,’ இரண்டுக்குமே கலவை முக்கியம்’ என லாலு ஹாஸ்யம் செய்வது வீடியோவின் ஹைலைட்.
சமையல் அனுபவம் குறித்த லாலுவின் மலரும் நினைவுகள்
இது: “நான் சிறுவனாக இருந்தபோது எனது மூத்த சகோதரர்கள் பாட்னாவில் வேலை செய்தனர். அவர்களை சந்திக்க பாட்னா வரும்போது, சகோதரர்களுக்காக சமையல் செய்வேன். அப்போதுதான் சமையலை கற்றுக் கொண்டேன் என்றார். ராகுல் சமைத்த மட்டனை லாலுவின் குடும்பத்தினர்
அனைவரும் சாப்பிட்டனர்.ராகுலே பரிமாறினார். லாலு குடும்பத்தினரோடு அவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார், வீட்டுக்கு போகும்போது தான் சமைத்த மட்டனை தங்கை பிரியங்காவுக்கும் பார்சல் வாங்கி சென்றுள்ளார். பிரியங்காவும் சம்பிரான் மட்டனை சாப்பிட்டுள்ளார்.
இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் லாலுவும், ராகுலும் மட்டன் சமைத்து,கூட்டணி கட்சி தலைவர்களை அசத்துவார்களா?.
000