தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவை.
இந்நிலையில், மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறையை அடுத்த தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வரிக்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன.
இந்த 11 பொருட்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புவிசார் குறியீடுக்காக அரசிதழில் வெளியிடப்பட்ட 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாவிட்டால், அந்த பொருட்கள் புவிசார் குறியீடு பதிவுபெறுவது உறுதி செய்யப்படும்.
அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட 11 பொருட்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான 4 மாத கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கான ஆட்சேபனைகள் எதுவும் வராததால், 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் புவிசார் குறியீடு பட்டியலில் தமிழகம் முதலிடம் பெறும்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய்காந்தி இவ்வாறு தெரிவித்தார்.