மணிப்பூரில் என்ன நடந்தது ? ஜனாதிபதி ஆட்சி ஏன் ?

பிப்ரவரி-13,
மணப்பூர் மாநிலத்தில் எப்போதோ அமல்படுத்த வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சி காலம் கடந்து இன்று அமல் செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பைரன் சிங் நான்கு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கு முயன்றது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைகளை நடத்தினார்கள்.

கலவர பூமியாக திகழும் மாநிலத்தின் புதிய முதலமைச்சரை பாஜகவால் தேர்வு செய்யமுடியவில்லை. இந்த தேக்க நிலைக்கு முடிவு கட்டுவதற்கு மணிப்பூரில் வியாழக்கிழமை மாலை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டு இருக்கிறது.

குக்கி மற்றும் மொய்தி சமூகத்தினர் இடையே இரண்டு ஆண்டுகளாக நடக்கும் கலவரத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து முகாம்களில் அடைக்கலம் புகுந்து உள்ளனர். இன்னும் பல நூறு பேர் அண்டை மாநிலமான மிசோரத்திற்கு சென்றுவிட்டனர்.

இவ்வளவு பெரிய கலவரத்தை முதலமைச்சர் பைரோன்சிங் கட்டுப்படுத்த தவறிவிட்டதால் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தின. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக விளங்கியது. ஆனால் மத்தியில் உள்ள அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

இந்த சூழலில் தமது மொய்தி சமூகத்தினருடன் கலவரத்திற்கு ஆதரவாக பைரோன் சிங் பேசிய குரல் பதிவு வெளியானது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் பைரோன் சிங் நான்கு நாட்கள் முன்பு விலகினார். அவருக்கு மாற்றாக புதியவரை பாஜகவால் கண்டுபிடிக்க முடியாததால் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டு உள்ளது.

இதனைதான் கண் கெட்டபிறகு சூரிய வணக்கம் என்று சொல்வார்கள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *