மே.24
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வெடித்துள்ள வன்முறையால் பதற்ற நிலை நிலவுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், மத்தியப் படைகளை கூடுதலாக வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி போராடிவருகின்றனர். இதற்கு நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கடந்த 3-ந்தேதி, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்து இருதரப்புக்கும் இடையே கலவரம் ஏற்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம், போலீசார் என 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் களமிறக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஒரு வாரத்தில் அமைதி திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் நியூ செகோன் பகுதியில் கடைகளை அடைக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அச்சுறுத்தல் விடுத்தது. அதைத்தொடர்ந்து ஒரு கும்பல் 2 வீடுகளை தீயிட்டு கொளுத்தியது.
இதேபோல், இம்பால் கிழக்கு மாவட்டம் புகாவோ, லெய்டான்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க உரிமம் பெற்ற துப்பாக்கிகளுடன் காவலில் இறங்கினர். இந்நிலையில், நேற்று மணிப்பூர் மாநிலம் அமைதியாக காணப்பட்டபோதும், பதற்றம் சற்று இருந்தது. வன்முறை நடந்த நியூ செகோன் பகுதியில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு ‘மைக்’ மூலம் பாதுகாப்பு படையினர் அறிவித்தனர்.
பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் ‘மெய்தி’ இன மக்கள், பழங்குடியின பயங்கரவாதிகள் தங்கள் பகுதியில் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
இதனிடையே மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அப்பாவி மக்களின் வீடுகளை எரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், வன்முறை தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் வதந்தியையும், வெறுப்பையும் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மத்திய படைகளில் இருந்து மேலும் 20 கம்பெனி படையினரை கேட்டுப்பெற முடிவு செய்துள்ளதாகவும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்றுவருவதாகவும், இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.