ஜுலை,30-
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது. பயணத்தின் முடிவில் தலைநகர் இம்பாலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்க்கியை சந்தித்து தாங்கள் கண்டவற்றை விளக்கி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது ஆளுநரிடம் மனு ஒன்றையும் எம்.பி. க்கள் கொடுத்தனர் . அதில் கூறியிருப்பதாவது..
“வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பயத்தோடு உள்ளனர். அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அவர்களின் கவலைகளையும் இழப்புகளையும் மற்றும் துயரக் கதைகளையும் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். மே 3- ஆம் தேதி கலவரம் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. அவர்கள் இன்னும் கோபத்தோடு உள்ளனர். அந்தக் கோபத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
குக்கி மற்றும் மொய்தி சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களில் 60,000- க்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடுகளையும் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டு உள்ளது.
நிவாரண முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பல இடங்களில் சுகாதார குறைப்பாடு நிலவுகிறது. அங்கு உள்ள குழந்தைகள் நோய் வாய்பட்டு இருக்கிறார்கள். பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி கவலையாக இருக்கின்றனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களாக இணைய தள சேவையை தடை செய்து இருப்பது தகவல் தொடா்பை முற்றிலும் குறைத்துவிட்டது. இதனால் வதந்திகள் அதிகரித்து நிலைமையை இன்னும் மோசமடையச் செய்து விட்டது. இணைய சேவை துண்டிக்ப்பட்டு இருப்பது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது”
இவ்வாறு எம்.பி.க்கள் குழு தங்கள் மனுவில் தெரிவித்து உள்ளது.
மேலும் மணிப்பூரில் கடந்த 89 நாட்களாக சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.க்கள் ” மணிப்பூரில் நடந்த வன்முறை குறைத்து பிரதமர் மவுனமாக இருப்பது அவரதுஅலட்சியத்தைக் காட்டுகிறது. இது வெட்கக் கேடானது” என்று தெரிவித்தனர்.
பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் அவர்கள் மணிப்பூர் துயரம் பற்றி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாததில் தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.
திமுக உறுப்பினர் கனிமொழி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன்,ரவிக்குமார் ஆகிய தமிழ்நாட்டு எம்.பி.க்களும் குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
000