ஜுலை, 21-
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடிக்கொண்டிருப்பதாக மணிப்பூல் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது,
அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வருவ நாடறிந்த செய்திதான். கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மே 4- ஆம் தேதி அன்று காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூக மக்கள் வசிக்கும் கிராமத்தைத் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது. பயந்து போன கிராமத்து பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி நாலாபுறமும் ஓடி தலைமறைவானார்கள். அவர்களில் சில பெண்களை வன்முறைக் கும்பல் அடித்து இழுத்து வந்தது. அப்போது அங்கு வந்த சொற்ப எண்ணிகையிலான போலிசார் வன்முறைக் கும்பலிடம் இருந்து பெண்களை மீட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஆயிரம் பேர் இருந்து உள்ளனர்.பலரிடம் ஆயுதங்களும் இருந்தன. இதைப் பயன்படுத்தி வன்முறைக் கும்பல் குகி சமூ கத்து பெண்களை போலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுச் சென்று விட்டது. பிறகு அந்த பெண்களில் சிலரை நிர்வாணப்படுத்தி அந்த கிராமத்து சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று உள்ளனர், இதை அவர்கள் செல்போனில் விடியோவாகவும் பதிவு செய்து வைத்தக் கொண்டனர்.
நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரை ஊர்வலத்தின் முடிவில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பக்கத்தில் உள்ள வயல்வெளிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிராக போராடிய அந்த பெண்ணின் சகோதரர் ஒருவரும் அதே இடத்திர் கொல்லப்பட்டு விட்டார்.
இது தொடர்பாக போலிசார் வழக்குப் பதிவு செய்து எப்.ஐ.ஆா். போட்டிருந்தாலும் கூட மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுதான் விநோதம்.
நிர்வாண ஊர்வலத்தை வீடியோவாக எடுத்திருந்த அந்த கும்பலைச் சேர்ந்த ஆள், அதை மற்றவர்களுக்கும் அனுப்பி ரசித்து இருப்பான் என்று தெரிகிறது. அப்படி பகிரப்பட்ட வீடியோதான் புதன் கிழமை அன்று சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிரச் செய்தது.
இதன் பிறகே மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங் நடவடிக்கையை ஆரம்பித்தார். சுமார் 3 மாதங்கள் கடந்து இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்க அவர் உத்தரவிட்டர். முதலில் ஹுரேம் ஹெராதேஷ் சிங் என்பவன் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு மேலும் ஒருவனை கைது செய்ததாக கூறப்பட்டது. இரவு வெளியான செய்தியில் மொத்தம் நான்கு பேரை கைது செய்ததாக மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகள் தகவல் பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கு வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பைரேன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
நாட்டையே அதிர வைத்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் இருந்த நீ்க்குமாறு அந்த நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. மற்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் படியும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
மணிப்பூரில் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து நடைபெற்று வரும் கலவரத்தில் இது போன்ற இன்னும் பல கொடுமைகள் நடைபெற்று இருக்கலாம்.பல பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. அங்கு அமைதி திரும்பி நடுநிலையான குழு ஒன்று நேரில் சென்று விசாரணை நடத்தும் போது இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம்,
000