மணிப்பூரில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு பா.ஜ.க.வின் வெறுப்பு, பிரிவினை மற்றும் அதிகார பேராசை அரசியலே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.
மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சமூகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தியது. இந்த பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர் தரப்பினர் பேரணி நடத்தினர். சவ்ரசந்திரபூரில் இரு தரப்புக்கும் இடையே கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த மோதலின் போது வீடுகளுக்கு,தெருக்களில் இருந்த வாகனங்கள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்த வன்முறை மற்ற மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் மணிப்பூர் வன்முறைக்கு பா.ஜ.க.வின் வெறுப்பு, பிரிவினை மற்றும் அதிகார பேராசை அரசியலே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டிவிட்டரில், மணிப்பூர் பற்றி எரிகிறது. பா.ஜ.க. சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி அழகான மாநிலத்தின் அமைதியை அழித்துள்ளது. பா.ஜ.க.வின் வெறுப்பு, பிரிவினை மற்றும் அதிகார பேராசை அரசியலே இந்த குழப்பத்திற்கு காரணம். அனைத்து தரப்பு மக்களும் நிதானத்தை கடைப்பிடித்து அமைதிக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருந்தார்.