‘ஆயுத எழுத்து’ படத்தில் முரட்டு இளைஞன் வேடத்தில் நடிக்க , மணிரத்னத்திடமே, மாதவன் நாடகம் ஆடிய சுவாரஸ்யமான சம்பவம், இது.
மணிரத்னம் அறிமுகம் செய்த மிருதுவான நாயகன்கள், அரவிந்த்சாமியும், மாதவனும்.ஆரம்பகால சினிமாவில், பால் வடியும் முகத்தோடு திரையில் வந்த இருவரும், பின்னாட்களில் .முரட்டு வேடங்களில் தோன்றி மிரட்டினர்.
மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2000 – ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் ‘சாக்லெட் பாய்’ கேரக்டரில் மாதவன் காதல் நாயகனாக தோன்றினார்.
இதற்கு நேர் எதிராக அவருக்கு அதிரடி நாயகன் என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்த திரைப்படம் ‘ரன்’.
மணிரத்னம் இயக்கத்திலும் அப்படி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினார், மாதவன், ஆனால் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு கொடுக்க தயங்கினார், மணி.
ஆனாலும் ஒரு நாடகம் நடத்தி ,அதிரடி வேடத்தை பெற்றார், மாதவன்.
எப்படி ? அவரே சொல்கிறார்.
‘ஆயுத எழுத்து ‘ படத்தில் என்னுடன் சித்தார்த், சூர்யா ஆகியோரும் நடித்திருந்தனர். சித்தார்த் நடித்த கேரக்டரில் தான் முதலில் என்னை நடிக்க வைக்க மணிரத்னம் அணுகினார். கதையைக் கேட்டதும் இன்பா வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகச் சொன்னேன். ஆனால் இன்பா கேரக்டரை எனக்கு தருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை.
‘அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய் ‘என்ற ரீதியில் அவரது பேச்சு இருந்தது.
‘ ஏன் அந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறாய் ?’ என்று கேட்டபோது, ‘அதுதான் சிறந்த வேடம் – மற்றவை மறந்துவிடும்’ என்று சொன்னேன்.அவர் கோபமடைந்தார்.
என்னை இன்பா வேடத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பவில்லை என்று தெரிந்தது. ‘அந்த கேரக்டரில் நடிக்க எனக்கு தகுதி உள்ளது – ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள்’ என கேட்டு,அனுமதி வாங்கினேன்.
என் தலைமுடியை மொட்டையடித்தேன்,வெயிலில் அலைந்து திரிந்தேன் – முற்றிலும் அடையாளம் தெரியாத ஆளாக மாறினேன்.அந்த தோற்றத்தில், அவரது அலுவலகத்திற்குச் சென்றபோது ‘வாட்ச்மேன்’ தடுத்து நிறுத்தினார். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
ஒரு வழியாக மணி சாரை சந்தித்தேன்- அவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை-
நான் சிரிப்பை அடக்க முடியாமல் , ‘நான்தான் மாதவன் ‘என்று சொன்ன பிறகே , அவரால் என்னை கண்டுபிடிக்க முடிந்தது
எனது ‘கெட்டப்’, இன்பா கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்ததால் அந்த வேடத்தை மணிரத்னம் கொடுத்தார்’என மலரும் நினைவுகளில் மூழ்கினார், மாதவன்.
—