ஜுலை, 13-
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.
பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நான்மாடக்கூடலாம் மதுரை மாநகரில்,கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ உருவாகியுள்ளது.
நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க மட்டும் 60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.பல்வேறு தலைப்புகளில் 3.30 லட்சம் புத்தகங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்கள்,காப்பியங்கள்,புராணங்கள்,கலை,அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பயிற்சி ஏடுகள், விவசாய தொழிலுக்கான புத்தகங்கள்,குழந்தைகளை ஈர்க்கும் நூல்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நவீன கலை அம்சங்களுடன் மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக உருவாகியுள்ள இந்த நூலகத்தில் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூல்களை இரவல் வாங்குவதற்கும் பெற்றுக்கொள்வதற்குமான பிரிவு,சொந்த நூல்கள் எடுத்து வந்து வாசிப்பதற்கான பிரிவு,குழந்தைகள் பிரிவு, கலைஞர் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு,நாளிதழ்,பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள்,போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள் என பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, இதன் சிறப்பு. இந்த நூலகத்தை காமராஜர் பிறந்ததினமான 15 – ஆம் தேதி, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கலைஞா் அவர்களின் இலக்கியப் பணியை போற்றுவதற்கு இந்த நூலகத்தை விடச் சிறநத் சின்னம் இருக்க முடியாது என்று புகழ்ந்து உள்ளார்.
மதுரைக்கு சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் கலைஞர் நூலகம் திகழும்.
000