மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தான், அ.தி.மு.க.பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு இது என்பதால், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். மாநாட்டை மதுரையில் நடத்துவது குறித்து கட்சியின் அமைப்பு செயலாளர் வேலுமணி தெரிவித்த தகவல் இது:
“மதுரை அதிமுகவின் கோட்டை. இங்கு எந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தாலும் வெற்றிதான். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்,மதுரையில் இருந்தே தங்கள் கட்சிப்பணியை தொடங்கி, மாபெரும் வெற்றி ஈட்டினர். அன்னை மீனாட்சியின் மண்ணை மிதித்தாலே அது வெற்றிதான். எனவே , எடப்பாடி பழனிசாமியும் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு எடுத்தார்.’’
அ.தி.மு.க.துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது,’மாநாட்டின் தாக்கம் , மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் .அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இந்த மாநாட்டுக்கு பிறகு, திமுக தவிர பிற கட்சிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கே வருவார்கள்’ என்று தெரிவித்தார்.
கால்கோள் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
மதுரை ராசி , எடப்பாடிக்கு கை கொடுக்குமா?
000