ஏப்ரல் 18
`அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.” – மம்தா
மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், மம்தா பானர்ஜியின் ஆட்சி 2026-ல் தேர்தலைச் சந்திக்கும்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மேற்கு வங்க அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னுடைய தலைமையிலான அரசைக் கவிழ்க்க நடத்தும் சதியில் அமித் ஷாவுக்கும் பங்கு இருக்கிறதா… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதாக மத்திய அரசின் பிரதிநிதி எப்படி இவ்வாறு பேசலாம்… அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.
ஆனால், நம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைக் கவிழ்ப்பதிலும், நமது அரசியலமைப்பை மாற்றுவதிலும் ஈடுபடுகிறாரா… எனக் கேள்வியெழுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு நம் நாட்டின் வரலாற்றை மாற்ற முயல்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கும் நிலையில், நீதித்துறையிலும் மூக்கை நுழைக்கிறார்கள். நாங்கள் ஒரு செய்தியைத் தெளிவான, சுருக்கமான மொழியில் கூற விரும்புகிறோம்.
அமித் ஷா மத்திய அமைச்சரைப்போலப் பேச வேண்டும். இது போன்ற கருத்துகளைப் பேசுபவர் நம் நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கத் தகுதியில்லை. அரசியலமைப்புரீதியாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு நிலையை உத்தரப்பிரதேசத்தில் பார்த்தோமே…” எனத் தெரிவித்திருக்கிறார்.