மராட்டியத்தில் வாரிசு பிரச்சினையால் குழப்பம். மகனால் உத்தவ் தாக்ரேவுக்கும், மகளால் சரத்பவாருக்கும் சரிவு

மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.

சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்க்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.

அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வது தலைவராகவும் விளங்கிய அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கவில்லை. இதனால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடித்தார்.

அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 26 பேருடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைவதாக காலையில் அறிவித்தார். மேலும் அவர் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு போய்  ஆளுநரை சந்தித்தார்.

இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக ஆளும் பாரதீய ஜனதா மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அறிவித்தன. உடனே பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு துணை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவரது ஆதரவு  எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில், மொத்தம் 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.  இவர்களில் அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்ற உறுதியான தகவல் இல்லை.  எனினும் அவருக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் பவார் இதற்கு முன்பு கடந்த 2019- ம் ஆண்டு பா.ஜ.க.வின் பட்னாவிசுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்றார்.  இதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் கட்சிக்கு திரும்பினார். பிறகு, உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போதும், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிட தக்கது.

குடும்ப அரசியல்.

மராட்டிய மாநிலத்தில் ஓராண்டுக்கு முன்பு உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. உத்தவ் தமது மகன் ஆதித்ய தாக்ரேவை கட்சியில் முன்னிலைப் படுத்தினார். இதனால் வெறுப்படைந்த ஏக்நாத் ஷிண்டே என்பவர் சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் திரட்டி கட்சியை உடைத்தார். இதனால் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்தது. பிறகு ஷி்ண்டே  பாரதீய ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து நடத்தி வருகிறார். மகனை முன்னிலைப் படுத்தியதால் சரிவை சந்தித்தார் உத்தவ் தாக்ரே.

இப்போது மகளை முன்னிலைப் படுத்தியதால் இழப்பை சந்தித்து இருக்கிறர் சரத்பவார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *