ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், சென்னை பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்து உள்ள 50 பக்க குற்றப்பத்திரிக்கையில் மலைக்க வைக்கும் சொத்து விவரங்கள் இடம் பெற்று உள்ளன.
சென்னையில் அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது என்பது புகாராகும்.நிறுவனத்தின நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாவிட்டனர்.
இதுதொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த மோசடியில் திரைப்பட நடிகர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும், பிஜேபி நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆருத்ரா வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், குற்றப்பத்திரிகையை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்தார்.
அதில் 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
000