May 31, 2023
பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி போலீசாரின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவர்களின் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம். விளையாட்டிற்கும் விளையாட்டு வீரர்களுக்கும் ஒன்றிய அரசு ஆதரவாக உள்ளது. விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
ராகுல்காந்தி தனது வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியாவை அவமதித்து வருகிறார். பிரதமர் மோடிதான் பாஸ் என ஆஸ்திரேலியா பிரதமர் கூறியதை ராகுலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் பாராட்டுகளை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை” என்றார்.
முன்னதாக பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கைக் கைது செய்ய போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கை அல்லது குற்றப்பத்திரிக்கை, அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், சாட்சியங்களை கலைக்க பிரிஜ் பூஷன் முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.