டிசம்பர்-30,
சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
சென்னை நங்கநல்லுரைச் சேர்ந்த சத்யபிரிாய என்ற மாணவி கடந்த 2022- ஆம் ஆண்டு பரங்கிமலை நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்த போது சதீஷ் என்பவரால் பிடித்துத் தண்டவாளத்தில் தள்ளப்பட்டார். அப்போது வேகமாக வந்த ரயில் ஏறியதால் சத்யா அங்கேயே உயரிழந்தார்.
சத்யாவும் சதீஷும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் சத்யா பிரிந்து விட்டதால் கோபமடைந்த சதீஷ் அவரை பிடித்து ரயில் முன்பு தள்ளிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, குற்றவாளி சதீஷ் மீதான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால அவரை 2 முறை தூக்கிலிட வேண்டும் என்று அறிவித்து உள்ளார். அவருக்கு அபராதமும் விதிக்கப்ட்டு உள்ளது.
தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “சிபிசிஐடி மிகச்சிறப்பாக இவ்வழக்கில் விசாரித்து குற்றத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்ததால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.
மரணத் தண்டனை என்பதால் இதனை ரத்துச் செய்யக்கோரி சதீஷ் அடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்யும் பட்சத்தில் அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது. அங்கும் மரணத் தண்டனைக்கு தடை கிடைக்காவிட்டால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.
அவரும் நிரகாரிக்கும் பட்சத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
மாணவியை கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*