ஜனவரி-1.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் எதிர்க்கட்சியான அதிமுக அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்தக் கட்சி சார்பில் அண்ணா பல்கலைக் கழக வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கிக் கொணடிருக்கும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தக் குழுவில் சினேகப் பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகிய மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை விதிக்குமாறு கேட்டால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்குமாறு அதிமுக தமது கேவியட் மனுவில் கேட்டுக் கொண்டு உள்ளது.
திமுக அரசுக்கு எதிராக மென்மையான போக்கை அதிமுக கையாண்டு வருவதாக விமர்சனங்கங்கள் எழுந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக பலாத்கார வழக்கில் மிகவும் தீவிரமான போக்கை எடுத்து இருக்கிறது. இந்த விவகாரத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஞான சேகரன் சம்பவத்தின் போது சொல்போனில் சார் என்று யாருடனோ பேசியதாக தகவல் ஒன்று வெளியானது. அந்த மாணவியை மிரட்டுவதற்காக அப்படி ஒரு தந்திரத்தை அவன் கையாண்டதாக காவல் துறை மறுப்பு தெரிவித்தது. ஆனால் அதிமுக இதற்கு மாறாக சார் என்று குற்றவாளி போனில் அழைத்தது திமுகவின் முக்கிய பிரமுகர், அவரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறை அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.
இதோடு நில்லாமல் யார் அந்த சார் ? என்ற வாசகம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை சென்னை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வாசகம் இடம் பெற்ற துண்டுப் பிரசுரங்களையும் வினியோகம் செய்தது.
இந்த வழக்கில் அதிமுக அடுத்தக் கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளது.
ஆனால் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு மனுத்தாக்கல் செய்யுமா என்பது தெரியவில்லை.