தமிழக சினிமாத்துறையில் இருந்து நிறையபேர் , ராஜ்யசபா ( மாநிலங்களவை )எம்.பி.க்களாக இருந்துள்ளனர். ஜெயலலிதா, சோ, சரத்குமார், இளையராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இடம் பெற உள்ளார்.
கமல்ஹாசன் கடந்த 2021 ஆம் நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமானார்.
கூட்டணி பேச்சு வார்த்தையின் போது கமலுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று 39 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தலுக்கு பிறகு கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.
அமெரிக்காவில் 4 மாதங்கள் தங்கி இருந்த கமல், அண்மையில் தமிழகம் திரும்பினார். கமலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வுசெய்யப்பட இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தலின்போது கமலுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முகமாகவே கமலை, சேகர்பாபு சந்தித்துள்ளார்.
‘தக்லைஃப்’ பட ‘டைட்டிலில் ‘ கமல்ஹாசன் பெயருக்கு பின்னால், ராஜ்யசபா எம்.பி. என்ற வாசகம் இடம் பெறுமா ?
—