வறுமைக்கோட்டுக்கு ரொம்பவும் கீழே, ’உழைத்தால் சோறு’ என்ற நிலையில் இருந்த வடிவேலு, மதுரையில் இருந்து காய்கறி லாரியில் ஏறி சென்னைக்கு வந்தவர்.தனக்கு மதுரையில் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த ராஜ்கிரண் அலுவலகத்தில் எடிபிடி வேலை பார்த்தார்.
பனகல்பார்க் பக்கமுள்ள அந்த அலுவலகத்திலேயே, படப்பிடிப்புக்கு பயன்படுத்திய ( செட் பிராப்பர்ட்டீஸ்)பொருட்களை சேமித்து வைக்கும் அறையில், குப்பை, கூழங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது, அவரது சென்னை வாழ்க்கை
ராஜ்கிரண் தனது ’என் ராசாவின் மனசிலே’படத்தில் காமெடி வேடம் கொடுத்து வடிவேலுவை சில காட்சிகளில் நடிக்க வைத்தார்.படம் வெள்ளிவிழா கொண்டாடியது.அவரது அனைத்து படங்களிலும் வடிவேலு தவறாமல் இருந்தார்.
தேவர்மகனில் இசக்கியாக சில காட்சிகளில் நடித்திருந்தாலும், உருக வைத்திருப்பார். ஊர்ச்சண்டையில் ஒருகையை இழந்தவர்அதனை பொருட்படுத்தாமல் ‘என்னா… திங்கிற கையால கழுவணும்..கழுவுற கையால திங்கணும்’ என பேசும் வசனம் மனதுக்குள் ஒரு பூகம்பத்தை வரவழைக்கும்.
கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலுவுக்கு தனிடிராக் அளித்து நகைச்சுவை காட்சிகளை எடுத்த பாரதிராஜா, ’வைகைப்புயல்’ என அவரை வர்ணித்தார்.
பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, எகத்தாளமான குரல் ஆகிய மூன்றும் கலந்த நடிப்பினால், விரைவிலேயே உயரம் தொட்டார்.
லட்சங்களில் சம்பளம் வாங்க ஆரம்பித்ததும், கணக்கு வழக்கு பார்க்க வேலுச்சாமியையும், கால்ஷீட் கவனிக்க முருகேசனையும் துணைக்கு சேர்த்துக்கொண்டு,ராகவேந்திரா திருமணம் மண்டபம் அருகே வாடகைக்கு வீடு பார்த்து குடியேறினார்.(அப்போது குடும்பம் மதுரையில் தான் இருந்தது)
வீழ்ச்சி ஏன்?
இயக்குநர் ஷங்கர் தயாரித்த இம்சை மன்னன் 23 ஆம் புலிகேசி படத்தில், ஹீரோவாக வடிவேலு நடிக்க , படமும் நன்றாக ஓடியது.
அதன்பின் ’நாயகனாக மட்டுமே நடிப்பேன்’ என ஒற்றைக்காலில் நின்றது, இயக்குநர்களுடன் மோதல், வேலுச்சாமி, முருகேசன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தது, அரசியல் பிரவேசம் என தனக்கான தோல்வியை அவரே உருவாக்கிக்கொண்டார்.
உச்சக்கட்டமாக இம்சை மன்னன் 24 ஆம் புலிகேசி படத்துக்கு ஒத்துழைக்காமல் கால்ஷீட் குளறுபடி செய்தது, வடிவேலுவை முடக்கிப்போட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில், ஷங்கர் புகார் அளித்ததால் படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு ரெட்கார்டு போடப்பட்டது.
ஏழைந்து ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தவருக்கு லைகா நிறுவனம் மறுவாழ்வு அளித்தது.10 கோடி ரூபாய் ஷங்கருக்குநஷ்டஈடு கொடுத்து தனது, ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவை கதாநாயகனாக நடிக்க வைத்தார், லைகா நிறுவனர் சுபாஷ்கரன்.
டைரக்டர் சுராஜுடன் மோதலில் இறங்கியதால் படம் குப்பையாக இருந்தது.தியேட்டரில் இருந்து சில நாட்களிலேயே நாய் சேகர், ரிட்டர்ன்ஸ் ஆனது.
இப்போது வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில்வடிவேலுவுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.படமும் ஹிட்.வடிவேலுவின் நடிப்பும் புகழப்படுகிறது. இயக்குநர் சொன்னதை கேட்டு’ சமத்துப்பிள்ளை’யாக நடந்து கொண்டதால் , இந்த வெற்றி சாத்தியமானது.
இதனை தொடர்ந்து வெளியாகும் சந்திரமுகி –2 படமும் வடிவேலுவுக்கு பெரும்பேரை பெற்றுத்தரும்.
இனி வடிவேலுவுக்கு வசந்தகாலமாகவே இருக்கும் என நம்புவோம்.
வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறினால், வடிவேலுவுக்கு கசந்த காலம் தான் எஞ்சிய நாட்களில் மிஞ்சும்.